எல்லையில் வீரர்களுக்கு போதிய அளவு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் எனக்கூறி ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையில் தீவிரவாத ஊடுருவல்கள் தடுத்து நிறுத்தப்படும் பொழுதும், பாகிஸ்தான் குறித்து பேசப்படும் பொழுது மட்டுமே ராணுவ வீரர்களின் பணி புகழ்ந்து பேசப்படுகிறது. ஆனால் ராணுவத்தில் நிலவும் உண்மை நிலைகள்  குறித்து அவ்வப்போது வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தேஜ் பதூர் யாதவ் என்ற வீரர் தனது மொபைல் போன் மூலம் தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 11 மணி நேரத்திற்கும் மேலாக கடுங்குளிரில் காவல் காக்கும் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளைக்கு ஒரு ரொட்டி மட்டுமே வழங்கப்படுவதாகவும், உயர் அதிகாரிகள் மூலம் தங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்கபப்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணுவ வீரர்களின் மோசமான நிலையை எடுத்துக்காட்டும் இந்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..

LEAVE A REPLY